விபத்துகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர்? பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மறு வாழ்வுக்கு என்ன வழி? அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை:  மதுரை மாவட்டம், ஏ.கொக்குளத்தைச் சேர்ந்த வாசுதேவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி தாலுகாவில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இவை போதிய பாதுகாப்பின்றியும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமலும் உள்ளன. எனவே, இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் எத்தனை பட்டாசு ஆலைகள் உள்ளன? இதில் எத்தனை லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

இங்கு கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன. இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளதா? விபத்துகளை தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படும் சூழலில் இவற்றை முறைப்படுத்தவும், அரசின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: