கஞ்சா விற்பனை குறித்த செய்தியை வெளியிட்டதற்காக சமூக விரோதக் கும்பல் வெறிச்செயல்: நிருபர் மோசஸ் கொலைக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்

சென்னை: கஞ்சா விற்பனை குறித்த செய்தியை வெளியிட்டதற்காக சமுக விரோதக் கும்பலின் கொலைவெறி தாக்குதலுக்கு பலியான தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மோசஸ் மறைவுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் தெருவை சேர்ந்தவர் யேசுதாஸ். தனியார் பத்திரிகை நிருபர். இவரது மகன் இஸ்ரேல் மோசஸ் (25), தனியார் டிவியில் நிருபராக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு 10.30 மணியளவில் இஸ்ரேல் மோசஸ், தனது வீட்டில் இருந்தார். அப்போது ஒரு வாலிபர் வந்தார். மோசஸை அழைத்து கொண்டு வெளியே சென்றார்.

இருவரும் பேசி கொண்டே நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு பதுங்கியிருந்த 3 பேர் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் வந்தனர். இதை பார்த்ததும் மோசஸ் அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்து தப்பியோட முயன்றார். 4 பேரும் சேர்ந்து மோசசை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் தலை, கழுத்து மற்றும் கையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மோசஸ் அலறியபடி கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு யேசுதாஸ் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த மோசஸை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர் பரிசோதனையில், மோசஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்து சோமங்கலம் போலீசார் விரைந்து சென்று, மோசஸின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், நல்லூர் புதுநகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிகளவு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சோமங்கலம் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் மோசஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இது கஞ்சா வியாபாரிகளுக்கு தெரியவந்ததால், அவர்களுடன் மோசசுக்கு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கஞ்சா வியாபாரி நவமணி தூண்டுதலின்பேரில், மோசசை அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து பழைய நல்லூரை சேர்ந்த விக்னேஷ் (எ) எலி அப்பு (19), மனோஜ் (17), வெங்கடேசன் (எ) அட்டை (19), கொலைக்கு தூண்டிய கஞ்சா வியாபாரி நவமணி (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கஞ்சா விற்பனை குறித்த செய்தியை வெளியிட்டதற்காக சமூக விரோதக் கும்பலின் கொலைவெறி தாக்குதலுக்கு தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மோசஸ் பலியாகியுள்ளதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: