ரம்மிக்கு 30% வரி வாங்கி கொண்டு மத்திய அரசு அனுமதிப்பது சரியா?... மதுமிதா, விஜயகுமார் மனைவி, வில்லியனூர், புதுச்சேரி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(38). தனியார் செல்போன் நிறுவனத்தின் ‘சிம் கார்டு’ மொத்த விற்பனையாளராக இருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான விஜயகுமார், ரூ40 லட்சத்தை இழந்தார். அதை மீட்க பல இடங்களில் கடன் வாங்கியதால், மன உளைச்சலுக்கு ஆளானார். ரம்மியில் விட்டதை பிடிக்க முடியாததால் ‘இனிமேல் என்னால் உங்களோடு நிம்மதியாக வாழ முடியாது. ஐஎம் சாரி’ என ஆடியோவை தன் மனைவிக்கு அனுப்பிவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விஜயகுமாரின் மனைவி மதுமிதா கூறியதாவது: எனது கணவர் கொரோனா காலத்தில் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஆட துவங்கினார். அப்ேபாது என்னிடம் சும்மா பாயின்ட் கணக்குதான்.. பணம் வைத்து எல்லாம் விளையாடவில்லை என்றே தெரிவித்தார். பிறகு அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தொழிலில் முதலீடு போட்ட பணம் 9 லட்சத்தை இழந்துவிட்டேன் என்று தெரிவித்தார்.  பின்னர் மறுநாள் ₹12 லட்சம் போய்விட்டதாக புலம்பினார். அன்று இரவு என் மொபைலுக்கு வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதில் நான் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை.

முதலில் ரூ50 போட்டு விளையாடியதில் ரூ100 லாபம் கிடைத்தது. ரூ100 போட்டால் ரூ200ம் ரூ500க்கு ரூ1000ம், ரூ50000க்கு ரூ1 லட்சமும் கிடைத்தது. பிறகு என்னை அறியாமலே ரூ3 லட்சத்தை இழந்துவிட்டேன் அதனை பிடிக்க வேண்டும் என்ற வெறித்தனத்தில் விளையாடி மொத்த பணத்தையும் இழந்துவிட்டேன். என்னை போன்று பல பேர் அடிமையாகி மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே எப்படியாவது ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தின் வாயிலாக பதிவிடு மது என்று கூறியதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை.

இதுவரை என்னுடைய 8 சவரன் நகை, தொழில் வங்கி கணக்கில் இருந்த பணம் மற்றும் வெளியில் வாங்கிய கடன் என மொத்தம் ரூ40 லட்சத்தை ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் அந்த நிறுவனத்திடம் 30 சதவீதம் வரி வாங்கிக்கொண்டு விளையாட அரசே அனுமதி வழங்கியுள்ளது வேதனைக்குரியது. புதுச்சேரி, தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. என் கணவர் உயிரிழந்த பிறகு நாங்கள் ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகிறோம். என் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் பல குடும்பம்  சீரழிந்துள்ளது. இனிமேல் ரம்மி விளையாடும் முன் உங்களது குடும்பத்தை நினைத்து பாருங்கள்.

எனவே உடனடியாக அரசு இதனை தடைசெய்ய வேண்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து இழப்பீடு பெற வேண்டும். கருணை அடிப்படையில் எனக்கு அரசு ஏதாவது வேலை கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் அந்த நிறுவனத்திடம் 30 சதவீதம் வரி வாங்கிக்கொண்டு விளையாட அரசே அனுமதி வழங்கியுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது.  புதுச்சேரி மற்றும்  தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

Related Stories: