6 லாரிக்கு 8 டிரைவர்கள் தானா? உரிமையாளரை கண்டித்த மோடி: படகு போக்குவரத்து துவக்க விழாவில் சுவாரசியம்

அகமதாபாத்: ஆறு லாரிகளை இயக்கி வரும் உரிமையாளர், 8 டிரைவர்களை மட்டுமே வேலைக்கு வைத்திருப்பதை பிரதமர் மோடி கண்டித்தார். குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ஹசிராவில் இருந்து பாவ்நகரின் கோகா வரையிலான படகுப் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக தொடங்கி வைத்தார். அப்போது, காணொலி மூலமாக பொதுமக்களிடமும் உரையாடினார். அப்போது, லாரி போக்குவரத்து உரிமையாளர் ஆசிப் சொலங்கி என்பவருடன் மோடி பேசினார்.

இருவருக்கும் இடையே நடந்த சுவாரசிய உரையாடல் வருமாறு:

‘‘நமஸ்தே சோலங்கி ஜி... நீங்கள் எத்தனை டிரைவர்களை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள்?

‘‘8 டிரைவர்கள் வைத்திருக்கிறேன்.’’

‘‘உங்களிடம் எத்தனை லாரிகள் இருக்கின்றன?’

‘‘6 லாரிகள் வைத்திருக்கிறேன்,’’

‘‘இது சரியல்ல. குறைவான டிரைவர்களை வைத்து அதிகமான வாகனங்களைப் பயன்படுத்துகிறீர்கள்,’’

‘‘இப்போது, சூழ்நிலை சரியல்லை. அதனால், இந்த டிரைவர்களே போதும் என்று நினைக்கிறேன்,’’

‘‘6 லாரிகளை இயக்க, 12 டிரைவர்கள் இருப்பதுதான் சரி. அதிக வேலைப் பளுவால் பாதிக்கப்படும் டிரைவர்கள் சோர்வடைவார்கள். அதனால்தான், வாகனத்தை ஓட்டும்போது அவர்கள் தூங்கிவிடுவதால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே, போதுமான டிரைவர்களை வேலைக்கு வையுங்கள்,’’

- பிரதமரின் அறிவுரையை ஏற்று, 12 டிரைவர்களை பணியமர்த்த சோலங்கி ஒப்புக் கொண்டார். ஆனால் பிரதமர் மோடி, விடாப்பிடியாக உறுதிமொழியையும் கேட்டு பெற்றார்.

அமைச்சகம் பெயர் மாற்றம்: விழாவில் பேசிய மோடி. ‘‘துறைமுகம், நீர்வழி போக்குவரத்துகளையும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தான் கவனிக்கிறது. எனவே, இந்த அமைச்சகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இனிமேல் இது, ‘துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என அழைக்கப்படும்,’’ என்றார்.

* கருப்பு பணம் குறைந்து, வரி அதிகரித்துள்ளது

ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஊழலை ஒழிப்போம்’ என்ற ஹேஷ்டேக்குடன் பிரதமர் மோடி நேற்று டிவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது. வெளிப்படையான பணப் பரிவர்த்தனைகளும் நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நமது தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

* பணமதிப்பிழப்பால் பொருளாதார சீரழிவு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அமலுக்கு வந்தது. தற்போது 4 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. அதில் அவர், ‘‘ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதே காலத்தில் வங்கதேசம் மட்டும் எப்படி வளர்ச்சியைப் பெற்றது? பணமதிப்பிழப்பினாலேயே இந்தியப் பொருளாதாரம் சீரழிந்தது. மோடியின் பணக்கார நண்பர்கள் மட்டுமே அதனால் பயனடைந்து உள்ளார்கள். இதன்மூலம், பெருமுதலாளிகளின் மூன்றரை லட்சம் கோடி கடன், வாராக்கடனாக ரத்து செய்யப்பட்டுள்ளது,’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: