சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியில் சென்னை விமான நிலையம் சாதனை: அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா காலத்தில் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானசேவைகள் 8 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் சரக்கு விமான சேவைகள் ஊரடங்கு தொடங்கிய முதல் 2 மாதங்களில் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை சர்வதேச சரக்ககப் பகுதியில் ஏற்றுமதி, இறக்குமதிகள் முழு வேகத்தில் நடக்கின்றன. சென்னை விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, கத்தார், ஓமன், சார்ஜா, குவைத், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜெர்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.  

இதனால் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும், சென்னை விமானநிலையத்திலிருந்து 29,132 டன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகியுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட 380 டன் அதிகரித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 28,752 டன் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதியானது என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: