அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர் இருக்க வேண்டும் ஆசிரியர், மாணவர் உடல்நிலையை வாரம் ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர் இருக்க வேண்டும். ஆசியர்கள், மாணவர்களின் உடல்நிலை வாரத்திற்கு ஒரு முறை பரிசோதிக்கப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 6ம் தேதி முதல் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 15ம் தேதிக்குள் மேல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  

இந்நிலையில் அனைத்து மாவட்ட துணை இயக்குனர் மற்றும் சென்னை மாநகராட்சி மாநகர கல்வி அலுவலர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பொருட்களை அனைத்து பள்ளிகளுக்கும் பகிர வேண்டும். அனைத்து வகுப்பறையிலும் சானிடைசர் இருக்க வேண்டும். அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நிலை வாரத்திற்கு ஒரு முறை சோதனை செய்ய வேண்டும். இணைநோய்கள் உள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த குழுவின் தொடர்பு எண்ணை அனைத்து பள்ளிகளுக்கும் பகிர வேண்டும்.  

அறிகுறி தென்படும் குழந்தைகளுக்கு உடனடியாக சோதனை செய்யும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். விட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்து அனைத்தும் போதிய அளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சுகாதார அதிகாரியை நியமித்து தொடந்து பள்ளியை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் உடல்நிலை தொடர்பான தகவலை உடனடியாக தயாரித்து அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும் இந்த நடைமுறை கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளில் கைகழுவும் வசதி மற்றும் தூய்மையாக வைத்திருக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்ய வேண்டும். விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: