திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு; தடுப்பணையில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்து பெரிய சுற்றுலா தலமாக விளங்குவது திற்பரப்பு அருவி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் வற்றாத கோதையாறு இங்கு அருவியாக விழுவதால், குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டில் எல்லா நாட்களிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. அதன் பிறகு இதுவரையிலும் சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 8 மாதமாக தடை நீடிக்கிறது. இருப்பினும் விடுமுறை நாட்களில் வீடுகளில் முடக்கி கிடக்கும் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர்.

அந்தவகையில் திற்பரப்பு அருவிக்கு அருகே உள்ள மாத்தூர் தொட்டிபாலம், சிதறால் மலை கோயில் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கும் வந்து செல்கின்றனர். இங்கு அருவிக்கு செல்ல அனுமதி இல்லாத காரணத்தால், தாங்களது வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு அருவியை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி பார்க்கின்றனர். கோதையாற்றில் பாறைகளை கடந்து பாய்ந்து ஓடிவரும் தண்ணீரின் அழகை கண்டு ரசிக்கின்றனர். இருப்பினும் அருவியில் குளிக்க முடியாத ஏக்கத்தை தீர்க்க, திற்பரப்பு தடுப்பணையில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீரில் கூட்டம் கூட்டமாக நின்று குளித்து மகிழ்கின்றனர். 8 மாதமாக தடை நீடிப்பதால் திற்பரப்பில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகள் தொழில் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

களைகட்டும் கன்னியாகுமரி

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கொரோனா காரணமாக தற்போது வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில் இன்று காலையும் ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன்  கன்னியாகுமரிக்கு வருகை வந்தனர். முதலில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் கடலில் ஜாலியாக குளித்து மகிழ்ந்தனர். கொரோனா தடை நீடித்தாலும் உள்ளூர் சுற்றுலாவினர் வருகையை போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் கன்னியாகுமரி மீண்டும் களைகட்ட தொடங்கி விட்டது.

Related Stories: