அம்பத்தூர் காவல் நிலையத்தில் போலீசாரை தாக்கிவிட்டு 4 கைதிகள் தப்பி ஓட்டம்

அம்பத்தூர்: அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனிகளின் பூட்டை உடைத்து அலுமினியம், இரும்பு, மூலப்பொருட்கள், வெல்டிங் மெஷின், லேப்டாப், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை திருடியது  தொடர்பாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் தனிப்படை போலீசார், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், ஆவடி நந்தவனமேட்டூர் திலகர் தெருவை சார்ந்த ஆனந்தராஜ் (30), முருகன் (20), ராகேஷ் (19), அம்பத்தூர் காமராஜபுரம் பெரியார் தெருவை சேர்ந்த பாபு (21) ஆகியோர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர்களை கைது செய்து, ₹2 லட்சம் மதிப்புள்ள இரும்பு, அலுமினிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை லாக்கப்பில் அடைத்துவிட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை  4 கைதிகளும் கழிவறை செல்ல வேண்டும் என அங்கிருந்த 2 போலீசாரிடம் கூறியுள்ளனர். போலீசார் லாக்கப்பை திறந்து அவர்கள் 4 பேரையும் கழிவறைக்கு அழைத்து சென்றனர். அப்போது,  4 கைதிகளும் போலீசாரை தாக்கி கீழே தள்ளி விட்டு, அங்கிருந்து தப்பினர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பினர்.

தகவலறிந்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன்,  உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாரிடம் விசாரணை  மேற்கொண்டனர்.

இதனிடையே, தப்பி ஓடிய கைதிகளில் 3 பேரை தனிப்படை  போலீசார் வடபழனியில் பிடித்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: