சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுடன் வந்த பள்ளி முதல்வரால் பரபரப்பு

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்தவர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு பயணியின்  கைப்பையை ஸ்கேன் செய்தபோது,  எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அந்த பையை திறந்து பார்த்தபோது, 9 மி.மீ. ரக துப்பாக்கி குண்டு ஒன்று இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். அதோடு அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்தனர்.  துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்து  விமான நிலைய  போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த செல்வராஜ் (42) என்பதும், இவர் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு தனியார் பள்ளி முதல்வராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.

இவர் பணியாற்றிய பள்ளியில் ஒரு மாணவனின் பையிலிருந்து இந்த குண்டை பறிமுதல் செய்ததாகவும், அதை  அப்படியே பையில் போட்டு தவறுதலாக  ஊருக்கு  எடுத்து வந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.  ஆனால், கடந்த 8 மாதத்திற்கு முன்பு அவர் விமானத்தில் சென்னை வந்தபோது ஏன் குண்டு பிடிபடவில்லை என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  மேலும் இந்த குண்டு  துப்பாக்கி குண்டு 9 மி. மீ.ரகத்தை சேர்ந்தது. கீழே போட்டால்  வெடித்து விடும் நிலையில் இருந்தது. எனவே தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும், இதுகுறித்து  பஞ்சாப் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குண்டு பறிமுதல் செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு துப்பாக்கி குண்டு எப்படி கிடைத்தது. பறிமுதல் செய்த குண்டை  அப்போதே போலீசில் ஒப்படைக்காமல் ஏன்  பையில் போட்டுவைத்திருந்தார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

Related Stories: