மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் சேவை நேரம் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை கருத்தில்கொண்டு மெட்ரோ  ரயில் சேவைகள் 8ம் தேதி(இன்று) முதல் நீட்டிக்கப்படுகின்றன. அதன்படி, திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். உச்சநேரங்களில் 7  நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

 

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உச்ச நேரம் இல்லாமல் இயங்கும். எனவே, பயணிகள் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, நிர்வாகம்  மேற்கொண்டுள்ள பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு:  வானிலை நிலவரங்களை உடனுக்குடன் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இருந்து பெற்று அதற்கேற்ப செயல்படும் வகையில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் சிறப்பு கண்காணிப்புக்குழு  உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: