பழவேற்காடில் டாக்டர் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

பொன்னேரி: பழவேற்காடு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாதநிலையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் குழந்தை  இறந்தது என்று உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அரங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர் குமார்-லட்சுமி தம்பதியருக்கு அண்மையில் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து 24 நாள் பச்சிளம் குழந்தைக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே அப்போது சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்து விட்டதாக செவிலியர்கள் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பழவேற்காடு அரசு மருத்துவமனை முன்பு சாமியானா பந்தல் போட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராணி, பொன்னேரி ஆர்டிஓ செல்வம், தாசில்தார் மணிகண்டன்,  ஆகியோர் நேரில் வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். 24 மணி நேரம் சுழற்சி முறையில் மருத்துவர்கள், டாக்டர்கள்  நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: