கோட்டைமேடு அருகே காட்டு வாரி பாலத்தில் பழுதான கூட்டு குடிநீர் குழாய் சீரமைப்பு

குளித்தலை: தினகரன் செய்தி எதிரொலியாக கோட்டைமேடு அருகே பழுதான கூட்டுகுடிநீர் குழாய் சீரமைக்க்ப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை மற்றும் 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கிராம கூட்டு குடிநீர் திட்ட குழாய் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்கிறது இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் குளித்தலை மணப்பாறை சாலையில் கோட்டைமேடு அருகே காட்டு வாரிபாலத்தில் செல்லும் கிராம கூட்டு குடிநீர் திட்ட குழாய் பழுது ஏற்பட்டு அதில் வீணாகும் நீர் நீர்வீழ்ச்சி போல் பல மணி நேரம் வீணாகி வந்தது. குழாய்கள் அமைத்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் இதுபோன்ற பழுதுகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.

ஆகவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி குளித்தலை மணப்பாறை சாலையில் காட்டு வாரி பாலம் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் ஏற்படும் பழுதை நீக்கி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்தனர். அதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: