ஜனாதிபதியை சந்தித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: சென்னையில் இருந்து கடந்த 4ம் தேதி அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அன்று மாலையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் துணை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் டெல்லி சாணக்யாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார்.

 சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், வரும் சட்டப்பேரவை தேர்தல், மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், மருத்துப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50சதவீத இடஒதுக்கீடு, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அதிருப்தி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உட்பட பல விஷயங்களை ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது. இதில் மேற்கண்ட பிரச்னைகளை கொண்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்த டெல்லி பயணத்தின் போது ஜனாதிபதி, துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதில் தமிழகத்தின் முக்கிய விவரங்கள் குறித்து தான் டெல்லியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசித்துள்ளார் என தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வமாக நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: