கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்-நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

அம்பை : கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்குள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கி வாய்க்கால் பாலம் வரை நகரின் முக்கியமான பகுதிகளில் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக  வாகனங்கள் செல்வதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பஜாரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், உதவி பொறியாளர் ஆல்பின் அஸ்மிதா, அம்பை தாசில்தார் வெங்கட்ராமன், சேரன்மகாதேவி வருவாய் ஆய்வாளர் அழகு மாரியப்பன், விஏஓ உத்தண்டசாமி, ஹெட் சர்வேயர் ராஜலட்சுமி, டெபுட்டி சர்வேயர் ராஜா, சாலை ஆய்வாளர்கள் வெள்ளத்துரை, மைக்கேல் மற்றும் சாலைப்பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

புதிய பேருந்து நிலைய பகுதி, ரயில் நிலையம் பஜாரில் உள்ள பேரூந்து நிறுத்தம் அருகில் மெயின் ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கடைகள் நெடுஞ்சாலைத்துறையினரால் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து பல கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிகள், திண்டுகள், முகப்பு மற்றும் முன்பக்க கூரைகளும், பேரூராட்சி அலுவலகம் அருகில் கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது கல்லிடைகுறிச்சி எஸ்ஐ முருகேசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கொரோனாவால் வியாபாரம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கையால் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

Related Stories: