திருச்சுழி அருகே கனமழை பாலத்தை டூவீலரில் கடக்கமுயன்ற வாலிபர்கள் வெள்ளத்தில் சிக்கினர்-அய்யனார் கோயில் ஆற்றிலும் நீர்வரத்து

திருச்சுழி: விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருச்சுழி அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்ற இருவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். அய்யனார் கோயில் ஆற்றிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை கொட்டியது.

திருச்சுழி அருகே குல்லம்பட்டி, மல்லம்பட்டி, மீனாட்சிபுரம், கொப்புசித்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மறவர்பெருங்குடியிலிருந்து தும்முசின்னம்பட்டிக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நேற்று காலை நூற்பாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தரைப்பாலத்தில் செல்ல முடியாமல் சுமார் 20 கிமீ தூரம் சுற்றிச் சென்றன.

மேலும் தண்ணீரின் வேகம் அதிகரித்த நிலையில் ஆபத்தை உணராமல் பெரிய ஓடையை டூவீலர்களில் கடக்க முயன்ற தும்முசின்னம்பட்டியைச்சேர்ந்த சோலைராஜ் (34), சின்ன சோலையப்பன் (21) இருவரின் வாகனங்களும் இழுத்து செல்லப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். தீயணைப்புத்துறையினர் சோலைராஜ் வாகனத்தை மீட்டனர். நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றொரு வாகனத்தை தேடி வருகின்றனர். தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் நாகமூர்த்தி, தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்கண்ணன் மற்றும் தீயணைப்புத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்:ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயில் ஆறு, கடந்த சில நாட்களாக வறண்டு காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் ராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று ராஜபாளையத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: