கன்னிகைப்பேர் கிராமத்தில் தொடர் மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஊத்துக்கோட்டை: கன்னிகைப்பேர் கிராமத்தில் தொடர்  மின்வெட்டு மற்றும் அதனை கண்டுகொள்ளாத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சியில் மடவிளாகம் கிராமம், மடவிளாகம் காலனி, அண்ணாநகர் இருளர் காலனி என 3 கிராமங்களில் விவசாயிகள் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இந்த பகுதிகளில் அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த 3 கிராம மக்கள் எங்கள் 3 கிராமங்களுக்கும் தனித்தனியாக டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்றும், இதுவரை மின்வெட்டை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்தும் நேற்று காலை பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு, ஒன்றிய கவுன்சிலர் ரவி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் இளையரசு, சுமதி, ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

இதையறிந்த, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலச்சந்தர், பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், பொதுமக்களின் கோரிக்கைகள் மூன்று மாதங்களில் நிறைவேற்றித்தரப்படும் என உறுதியளித்தார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், மலைவாழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: