பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நகரமைப்பு அதிகாரி கைது: கணக்கில் வராத 2 லட்சம், 16 கிராம் தங்கம் பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி, சொத்து வரி மற்றும் கட்டிட அனுமதி பெறும் பொதுமக்களிடம், நகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 11 அதிகாரிகள் நேற்று மாலை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னதாக, அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவோ முடியாத வகையில் பிரதான கதவை மூடினர். பின்னர், அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளின் அறைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், நகரமைப்பு அதிகாரி மாறன் அறையிலிருந்து கணக்கில் வராத 1.55 லட்சம், 8 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் அறையில்  இருந்து 46,500 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, நகரமைப்பு அதிகாரி மாறனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இதேபோல், மீனம்பாக்கம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பல லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: