கிண்டி, ஒரகடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் - நிலை 2ன் ஒரு பகுதியாக சென்னை, கிண்டியில் ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். இந்த மையத்தில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆடியோ காட்சி விரிவுரை அரங்கம், நிர்வாக அலுவலகங்கள், மாநாடு மற்றும் உள்கூட்ட அரங்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  

இம்மையத்தின் மூலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை சுகாதார பணியாளர்களுக்கும் உயர்நிலை திறன் பயிற்சி மற்றும் உயர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு, உயரிய  வேலைவாய்ப்பினை அவர்கள் பெற உறுதி செய்வதே மையத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் இந்த மையத்துடன் உலக சுகாதார அமைப்பும் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்ட பேரிடரை கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கோவிட்-19 தொற்று தொடர்புடைய பயிற்சி பாட திட்டத்தினை தொடங்குகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். இந்த மையத்தில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் சரக்கு நகர்வு மேலாண்மை குறித்த உயர் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் வாணியம்பாடியில் ரூ.20 கோடியே 37 லட்சம் செலவில் அமைத்திட, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related Stories: