கொரோனா பரவ வாய்ப்பு: பொதுமக்கள் நலனுக்காக வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பாஜகவுக்கு நல்லது...அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பொதுமக்கள் நலனுக்காக வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த தமிழக பாஜக  திட்டமிட்டது. இந்த யாத்திரையானது வரும் நவம்பர் 6-ம் தேதி நாளை திருத்தணியில் தொடங்கி  டிச. 6ம் தேதி திருந்செந்தூரில் முடிவடைய இருந்தது. இந்த வேல் யாத்திரையில் பங்கேற்க கர்நாடக முதல்வர் எடியுரப்பா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 6 மாநில  முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.

இருப்பினும், இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில்,  கொரோனா 2வது மற்றும் 3வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. அத்துடன் வேல் யாத்திரைக்கு  தமிழக அரசு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் எனக்கூறி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவின் வேல் யாத்திரையால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலனுக்காக வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பாஜகவுக்கு நல்லது. யாராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் சட்டம் சன் கடமையைச் செய்யும். கொரோனா 2-ம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றார்.

Related Stories: