அரசு அனுமதி வழங்கும் என நம்புகிறேன்: மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியது வேல் யாத்திரை: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

சென்னை: பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டார். இந்த யாத்திரையானது வரும் டிச. 6ம் தேதி திருந்செந்தூரில் முடிவடைய இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையில், கொரோனா 2வது மற்றும் 3வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. அத்துடன் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் தடைகேட்ட வழக்குகளை நீதிமன்றம் முடித்துவைத்தது.

இந்நிலையில், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தற்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், வேல் யாத்திரை மிகப்பெரிய கூட்டத்தை கூட்டக்கூடிய யாத்திரை அல்ல. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய யாத்திரை. வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவதுதான் முறையாக இருக்கும். அனுமதி வழங்குவார்கள் என நம்புகிறேன்.  

தமிழகத்தின் எதிர்கால நன்மை கருதியும், தமிழக மக்களின் நிண்டகால எதிர்பார்புகளை விளக்கும் வகையிலும் அமைந்திருப்பது தான் வேல் யாத்திரை. வேல் யாத்திரையால் யாருக்கும் பிரச்சனை இருக்காது. நோய் தொற்று பரவக்கூடிய பிரச்சனை இருக்காது என்று நாம் நம்புகிறோம். இது குறித்து உரிய நடவடிக்கைகளை மாநில தலைமை ஆலோசனை செய்து அதன் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

Related Stories: