தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க போதுமான விழிப்புணர்வு: தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கொரோனாவை பரவலை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் உலகில் பல நாடுகளில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த நிலையில் 9வது கட்டமாக கடந்த அக்.31ம் தேதி ஊரடங்கை உத்தரவு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலகத்தில் நேற்று மாலை 3 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர், தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், தீபாவளி பண்டிகையொட்டி மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்டங்களில் ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கி வரன்முறைப்படுத்தவும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவும், ஆன்லைன் பட்டா விரைந்து வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: