சென்னையில் இன்று பலத்த மழை: சாலைகள் வெள்ளக்காடானது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் குளம் போல தேங்கி வெள்ளக்காடானது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது சில மணி நேரத்திற்கு தொடர்ந்து நீடிக்கும். அதன்பிறகு தொடர்ந்து சிறிது இடைவெளி விட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் சென்னையில் லேசாக மழை பெய்தது.

காலை 8 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, புழல், செங்குன்றம், சோழவரம், ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருத்தணி, பூந்தமல்லி, எண்ணூர், மணலி, மாதவரம் பகுதிகளில் சாலைகளில் இருபுறமும் மழைநீர் கரை புரண்டோடியது. வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் சிரமத்திக்குள்ளானார்கள். இதனால் மக்கள் வெளியில் வரமுடியாமல் வீடுகளில் முடங்கினர்.

பல இடங்களில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, நங்கநல்லூர் சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. அதேபோல் வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருள் சூழ்ந்திருந்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் சென்றனர். பெரம்பூர், தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் விம்மோ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆலந்தூர் கத்திப்பாரா ஜிஎஸ்டி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக சாலையோரத்தில் தோண்டப்பட்டிருந்த குழிகளில் விழுந்து பலர் விபத்துகளை சந்தித்தனர்.

மழைநீர் வெளியேற வழியில்லாததால் தண்ணீர் தேங்கியது. ஏற்கனவே கடந்த 29ம் தேதி எதிர்பாராத மழையால் வெள்ளம் சூழ்ந்தது. சென்னை மாநகராட்சியும் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. அனைத்து தரப்பினரும் தவித்தனர். அதன் பிறகாவது மாநகராட்சி, மழைநீர் வெளியேற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியிருக்கும் என்று பார்த்தால் எதுவும் இல்லை. அதனால் மீண்டும் சென்னை வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

Related Stories: