ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை அரசால் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி மாநில மக்களின் பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. ஏனெனில் இங்குள்ள மேகம், பெரியார், கவ்வியம், செருக்கலூர், எட்டியாறு போன்ற நீர்விழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள் ளன. இந்த நீர்வீழ்ச்சிகளில் மழை காலத்தில் நல்ல நீர்வரத்து இருக்கும். குறிப்பாக சாலையோரத்தில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தற்போது தெளிந்த நிலையில் அதிகமான நீர்வரத்து உள்ளது. இதனால் மலைக்கு திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் ஏராளமான மக்கள் கார், பஸ் போன்ற வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக  ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருந்ததால் படகு துறையில் போட்டிங் செல்லவும்,  மற்றும் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் தடை விதிக்கப் பட்டிருந்தது. இதனால் கல்வராயன்மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர்விழ்ச்சியில் நல்ல நீர்வரத்து இருந்தும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து தமிழ்முரசு நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பெரியார் நீர்விழ்ச்சியில் குளிக்கவும், வெள்ளிமலை படகு துறையில் படகுசவாரி செல்லவும் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

இதையடுத்து கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிளவில் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் கார், வேன் போன்ற வாகனங்களில் நேற்று குடும்பத்துடன் வந்து குளித்தும் சென்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் குளிக்கவும், போட்டிங் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்ட தகவல் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு தெரிந்தால் இன்னும் கூட்டம் அதிகளவில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: