திருச்சி வெங்காய மண்டியில் எகிப்து வெங்காயம் 25 டன் இறக்குமதி.:விலை சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருச்சி: திருச்சி வெங்காய கமிஷன் மண்டியில் எகிப்து வெங்காயம் 25 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்படும் வெங்காயம் தற்போது கனமழையால்  வராததால் வெங்காய விலை தற்போது அதிகரித்துள்ளது. திருச்சி சந்தையில் பெல்லாரி பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சிறிய வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த சில வாரங்களில் சிறிய வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 100 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது எகிப்து வெங்காயம் 25 டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த வாரம் 5 டன் வெங்காயம் இறக்குமதி செய்த நிலையில், தற்போது 25 டன் வெங்காயம் வந்துள்ளதால் தற்போது 60 - 55 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி 300 டன் வெங்காயம் தேவைப்படும் பட்சத்தில் சென்ற மாதத்தில் 200டன் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், எகிப்து மற்றும் துருக்கி வெங்காயங்கள் இறக்குமதி செய்வதால் தற்போது 200 டன் வெங்காயம் வரத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் மகாராஷ்டிராவில் வெங்காய பயிர் தற்போது முளைவிட தொடங்கியுள்ள நிலையில் ஜனவரிக்கு பின்பு வெங்காயத்தின் விலை பாதியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் வெங்காய கமிஷன் மண்டி செயலாளர் தங்கராஜ் தெரிவித்தார்.

மேலும் வியாபாரிகள் கூறுகையில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு காரணமாகவும் அதன் சுவை இன்மை காரணமாகவும் மக்கள் வாங்க விருப்பம் இல்லாததால் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வரும் காலத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: