உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தகவல்

சென்னை: சட்டக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சட்டப் பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம்12ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தகுதியுள்ள நபர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்தனர். அதற்காக வங்கிகள் மூலம் கட்டணமும் செலுத்தினர்.

இதில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் கல்வி சார்ந்த பணிகளில் நியமனம் செய்ய இருந்தனர். அரசு சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் இந்த நியமனங்கள் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த பணி நியமனப் பணிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் மேற்கண்ட பணிநியமனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த பணி நியமனம் நடக்காது என்றும் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கட்டணத்தை திரும்பப் பெறும் வகையில், விண்ணப்பித்த நபர்கள் தங்கள் பெயர் முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களையும், கட்டணம் செலுத்திய வங்கி விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவரங்களை lawuniversity.estt.t@gmail.com  என்ற இணைய தளத்தில் தெரிந்து கொண்டு அதில் பதிவிடப்பட்டுள்ள விண்ணப்படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு கட்டணங்கள் திரும்ப வழங்கப்படும்.

Related Stories: