விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக பாடுபட்டார்: அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்.!!!

சென்னை:  தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க கடந்த மாதம் 13ம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றார். அப்போது, அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைச்சர் துரைக்கண்ணு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, கடந்த 13ம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 25ம் தேதி மருத்துவமனை  நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரின் நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பது சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு நுரையீரல் பாதிப்பு மட்டுமின்றி வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளது.

எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது. அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவர்கள் தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக  மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றிரவு 11.15 மணி அளவில்  அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், சமுதாய சேவை, விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு பாடுபட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். துரைக்கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Related Stories: