×

வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு பேரணி: போலீசார் உறுதிமொழி ஏற்பு

சென்னை: சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை அணிவகுப்பு பேரணி 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான அக்.31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை பேரணி நடத்தப்படுகிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணியளவில் சென்னை தீவுத்திடலில் நுழைவாயில் முன்பாக உள்ள ராஜாஜி சாலையில் தமிழக காவல்துறை அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது.

காவல்துறை அணிவகுப்பு பேரணியில் தமிழக காவல்துறையின் கமாண்டோ படை, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சென்னை பெருநகர குதிப்படை, காவல் வாத்தியக்குழு மற்றும் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இப்பேரணி தீவுத்திடலில் தொடங்கி கொடிமர இல்ல சாலை வழியாக முத்துசாமி பாலம் வரை சென்று போர் நினைவுச் சின்னத்தை மீண்டும் வந்தடைந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை அதிகாரிகள், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : birthday ,Vallabhbhai Patel , Police march on Vallabhbhai Patel's birthday: Police take oath
× RELATED பிரபல ரவுடியுடன் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டர்