×

அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது 134வது பிறந்தநாளையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் ராமதாஸ் கூறுகையில், ‘சமூக நீதிக்கு எதிரான பாஜவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது குறித்து விழுப்புரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்து இருக்கிறார். தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வது வாடிக்கையானது தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி வைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என அன்புமணி கூறியிருக்கிறார். எனக்கு தெரியாத செய்தி. இது பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை,’ என்றார்.

பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்த நிலையில், ராமதாஸ் அதிமுகவுடனும் அன்புமணி பாஜவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பினார். ஆனால், அன்புமணி மீது சிபிஐ வழக்கை காட்டி பாஜ மிரட்டியதால் அவர்களுடன் கூட்டணி அமைத்தார். கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட அன்று சேலத்தில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி பங்கேற்றனர். ஆனால் இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசவில்லை. தன் எதிர்ப்பை மீறி பாஜவுடன் கூட்டணி அமைத்ததால்தான் ராமதாஸ் பேசவில்லை என்று கூறப்பட்டது.

பாஜவுடன் கூட்டணி அமைத்ததால் பாமக தலைவர்கள் பல நிர்வாகிகள் விரக்தியடைந்து கட்சி தாவி உள்ளனர். பலர் பிரசாரத்துக்கு செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கோவை பாமக மாவட்ட செயலாளார் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனால், பாஜ மேலிடத்தில் இருந்து வந்த மிரட்டலால் அடுத்த சில மணி நேரங்களில், தான் அந்த அறிக்கையை வெளியிடவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார். பாஜவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே கட்சியில் பல்வேறு பிரச்னைகள் உருவாகி வரும் நிலையில், பாஜவுடனான கூட்டணி குறித்து அன்புமணியின் கருத்துக்கு ராமதாஸ் பேச விரும்பவில்லை என்று கூறி உள்ளது அவரின் விரக்தியின் வெளிப்பாடுதான் என்று பாமகவினர் தெரிவித்து வருகின்றனர்.

The post அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Alliance ,BJP ,Anbumani ,Ramadoss ,Ambedkar ,Thilapuram ,BAMAK ,Tindivanam ,Villupuram district ,Ramadas ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...