வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய மாஜி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி வீடு முன் அதிமுக கிளைச்செயலாளர் தீக்குளிக்க முயற்சி: கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு

சென்னை: முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றுவதால் முதல்வர் வீட்டு முன்பு அதிமுக கிளைச்செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கீரின்வேஸ் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், செட்டியப்பட்டி அதிமுக கிளைச்செயலாளராக இருப்பவர் சின்னச்சாமி (45). இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு கூட்டுறவுத் துறையில் வேலை தரும்படி அப்பகுதியின் முன்னாள் எம்எல்ஏ பூவை செழியனிடம் கூறி அவரிடம் ரூ.8 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்து அதிக நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

இதையடுத்து சின்னச்சாமி அவரிடம் சென்று வேலை வாங்கி தாருங்கள், இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த சின்னச்சாமி வேறுவழியின்றி நேற்று காலை முதல்வரை சந்தித்து நடந்ததை கூறலாம் என்று திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முதல்வரை சந்திக்க அனுமதிவில்லை.

எவ்வளவு கெஞ்சியும் அவரை அனுமதிக்காதால் விரக்தியடைந்து சின்னச்சாமி, பையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்வர் வீட்டு முன்பு அதிமுக கிளைச்செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: