மாதவரத்தில் சொந்த பட்டா நிலத்தில் கலைஞர் சிலையை திறக்க அனுமதி கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: மாதவரத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் திமுக  தலைவர் கலைஞரின் மார்பளவு சிலையை அமைக்க அனுமதி கோரி திமுக பொதுக்குழு உறுப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் எம்.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாதவரம் தாலுகாவில் கொசப்பூரில் எனக்கு சொந்தமான 1190 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எனது பெயரில் உள்ளது.

முழுவதும் எனது அனுபவத்தில் இருக்கும் இந்த நிலத்தில் திமுக மறைந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மார்பளவு சிலையை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலையை அக்டோபர் 20ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டது. விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞரின் மார்பளவு சிலையை திறந்து வைக்கவிருந்தார். சிலை திறப்பு விழா நடத்த அனுமதி கோரி ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் மனு அனுப்பியதாக காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

எனவே, எனது சொந்த நிலத்தில் திமுக மறைந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மார்பளவு சிலையை திறக்க அனுமதி அளிக்குமாறு போலீசாருக்கும், மாதவரம் தாசில்தாருக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி, புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, தனி நபர் ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சிலைகளை வைக்கலாம் என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார். வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: