அதிக பாதிப்பு பகுதிகள் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு வார்டு வாரியாக குழுக்கள் அமைப்பு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வார்டு வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் மழைநீர் வடிகால் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் அளித்த பேட்டி: சென்னையில் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து 2,500 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக 1,100 கி.மீ தொலைவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் ரூ.2,750 கோடி மதிப்பீட்டில் துவங்கியுள்ள வடிகால் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும். சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகள் அனைத்தும் அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

1969ம் ஆண்டுக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் சென்னையில் 22 செ.மீ சராசரியாக மழை பதிவாகி உள்ளது. மாநகராட்சியில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடங்களை தவிர மற்ற இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக தற்போது 18 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் சிசிடிவி மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மண்டலம் வாரியாக 5 பொறியாளர்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூவம் ஆற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த 15,000 குடும்பங்களில் 13,500 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு இடத்தில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த 6 மாதங்களில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். சென்னையில் 50 சதவீதம் மக்கள் மாஸ்க் அணிவதில்லை என்று முதல்வர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழையின் போது நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மக்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் 20 மடங்கு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: