நிதித்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்து 2 மாதங்களான நிலையில் ஜெயலலிதா நினைவிட பணிக்கு கூடுதலாக ரூ.12 கோடி ஒதுக்குவதில் தாமதம்

* இம்மாதம் இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்க கெடு

* பணிகளை முடிக்க சாத்தியம் இல்லை எனத் தகவல்

சென்னை: கடந்த 2 மாதங்களாக ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ₹12 கோடி கூடுதலாக ஒதுக்கீடு தருவது தாமதம் ஆகி வரும் நிலையில், இம்மாத இறுதிக்குள் அரசிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரீனா கடற்கரையில் ₹58 கோடி செலவில் கடந்த 2018 முதல், அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், கட்டிடத்தின் மையப்பகுதியில் பீனிக்ஸ் பறவை, இடது புறத்தில் அறிவு சார் பூங்கா, வலது புறத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து நடைபாதை, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது, பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு பக்கமும் பீனிக்ஸ் பறவை இறக்கை அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், முதுகுப்பகுதியில் கான்கிரீட் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து, அந்த கான்கிரீட்டில் இருந்து விரைவில் சென்ட்ரிங் பிரிக்கப்படவுள்ளன.

இதை தொடர்ந்து தான் அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவது, ஜெயலலிதாவுக்கு சிலிக்கான் சிலை வைப்பது, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பாக மக்கள் அறியும் வகையில் டிஜிட்டல் திரை வசதி ஏற்படுத்தவது, கட்டிடத்தின் முன்புறத்தில் இரண்டு சிங்க சிலை, அதன் நடுவில் ஜெயலலிதா மார்பளவு சிலை வைக்கப்படுகிறது. இதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ₹12 கோடி நிதி கேட்டு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நிதித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், தற்போது, பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், ₹12 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், தற்போது வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் இம்மாத இறுதிக்குள் நினைவிட பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யாத நிலையில் இம்மாதம் இறுதிக்குள் முடிப்பது கூட சாத்தியம் இல்லை. இதனால், இம்மாதத்தில் அரசிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: