ஊட்டி நகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தம்

ஊட்டி:  ஊட்டி நகரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுபடுத்தவும், குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் 5  தானியங்கி வாகன பதிவெண் பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஊட்டி நகரில் குற்ற சம்பவங்கள் தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகரின் பல பகுதிகளில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள பகுதிகள், சுற்றுலா  தளங்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதிமீறல்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து கைது செய்வதிலும் கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு  வகிக்கிறது.

இதன் ஒருபகுதியாக ஊட்டி நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் சேரிங்கிராஸ் சிக்னல் பகுதியில் ஊட்டி-கூடலூர் சாைல, கமர்சியல் சாலை,  கோத்தகிரி சாலை, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை ஆகிய சாலைகளில் 5 அதிநவீன தானியங்கி வாகன பதிவெண்களை பதிவு செய்யும்  கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக உயர் கம்பங்கள் அமைக்கப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர 4 சிசிடிவி., கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.  பைபர் கேபிள் மூலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் அனைத்தும் பதிவாகும்.

இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களான ெஹல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது, சிக்னல் விதிமீறல், அச்சுறுத்தும் வகையில்  அதிவேக வாகன இயக்கம் உள்ளிட்டவைகளில் ஈடுபடுபவர்களின் வாகனங்களின் பதிவெண் தானியங்கி கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும். பின்னர் விதிமீறலில் ஈடுபட்டவர்களின் முகவரிக்கு, விதிமீறல் குறித்த தகவல் அனுப்பி அபராதம் வசூலிக்கப்படும். இதுதவிர குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் விரைந்து பிடிக்கவும் முடியும் என காவல்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: