‘‘பை, பை கொரோனா’’.. உலகின் முதல் அறிவியல் கார்டூன் புத்தகத்தை வெளியிட்டார் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென்

புதுடெல்லி : கொரோனா பற்றிய அறிவியல் கார்டூன் புத்தகத்தை, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் வெளியிட்டார். இது உலகின் முதல் அறிவியல் கார்டூன் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமான  தகவல்களை மக்களிடம்,  எளிதாக கொண்டு சேர்ப்பதில், கார்டூன் முக்கிய பங்கு வகிக்கிறது.  அறிவியல் அடிப்படையிலான தகவல்களை கார்டூன் மூலம் தெரிவிப்பதுதான் ‘சயின்டூன்’(அறிவியல் கார்டூன்). மக்களிடம் அறிவியல் தகவல்களை, இந்த அறிவியல் கார்டூன்கள் மிக நுட்பமாகவும், சுவாரஸ்யமாகவும் தெரிவிக்கின்றன.

‘‘பை பை கொரோனா’’ என்ற தலைப்பில் உலகின் முதல் அறிவியல் கார்டூன்  புத்தகத்தை லக்னோவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா எழுதியுள்ளார். இதை உத்தரப் பிரதேச ஆளுநர் திருமிகு ஆனந்தி பென் படேல், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் இன்று வெளியிட்டார்.  மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் முகமை இதை வெளியிட்டுள்ளது.  இந்த புத்தகத்தின் தலைமை ஆசிரியர்  விஞ்ஞான் பிரசார் அமைப்பின் இயக்குனர் டாக்டர் நகுல் பரஷர்.  220 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விரிவான தகவல்கள் நகைச்சுவை கேலிச் சித்திரங்களுடன் (கார்டூன்கள்) இடம் பெற்றுள்ளன.

இது குறித்து இதன் ஆசிரியர் டாக்டர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘கோவிட்-19 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த புத்தகத்தின் அடிப்படை நோக்கம். என்னைத் தவிர 7 மாணவர்களும் இந்த புத்தகத்துக்குத் தங்கள் கார்டூன்களை வழங்கியுள்ளனர்’’ என்றார். இந்த புத்தகம் பிரேசிலில் விரைவில் வெளியிடப்படவுள்ளது. போர்ச்சுகீசிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்படவுள்ளது. இந்த புத்தகத்தை  3டி தொழில்நுட்பத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: