கொரோனா பாதிப்பு காரணமாக அரசியல் கட்சி திட்டத்தை கைவிட்டார் ரஜினிகாந்த்? நண்பர்களுக்கு பரபரப்பு கடிதம்

சென்னை: கொரோனா  தாக்கம் குறையாத காரணத்தால் தனது அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட  நடிகர் ரஜினிகாந்த் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த  2017ம் ஆண்டு  தமிழகம் முழுவதிலும் இருந்து  வந்த ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பு நிகழ்ச்சி  தலா 15 நாட்கள் என இரண்டு முறை நடந்தது. 2017 டிசம்பர் 31ம் தேதி  ரசிகர்களிடையே பேசிய ரஜினிகாந்த், ‘நான் அரசியலுக்கு வருவது  காலத்தின்  கட்டாயம். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அதை சரி செய்ய வேண்டும். பணம்  சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்கள், என்னுடன் அரசியலுக்கு வர வேண்டாம்.  நேர்மையான அரசியலை தர விரும்புகிறேன். போர் (தேர்தல்)  வரும்போது அதற்கு  தயார் ஆவோம்’ என கூறியிருந்தார். அதன்பிறகு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி  மக்கள் மன்றம் என அவர் பெயர் மாற்றம் செய்தார். தமிழகம் முழுவதிலும்  இருந்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள்  நியமிக்கப்பட்டனர்.  அவ்வப்போது அவர்களை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

அப்போது,  அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள அவர் ரசிகர்களுக்கு  உத்தரவிட்டார். அதன்படி மக்கள் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது,  சமூக பணிகளில் ஈடுபடுவது என மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டு  வந்தனர். இந்த  ஆண்டு துவக்கத்தில் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, தான் கட்சி  தொடங்கும்போது, கட்சி தலைமைக்கு ஒருவரும் முதல்வர் வேட்பாளராக  மற்றொருவரும் இருப்பார்கள். அதன்படி தான் கட்சி தலைமையை  பார்த்துக்கொள்ள  முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இந்த முடிவால் ரஜினி ரசிகர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ரஜினி, அரசியல்  கட்சியை தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால், கொடிய  கொரோனா நோய் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக, தனது அரசியல் பிரவேச அறிவிப்பை ரஜினி தள்ளிவைத்தார்.  கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் இப்போது, அரசியல் கட்சி தொடங்கும்  திட்டத்தை  கைவிட ரஜினி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக  சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தனது முடிவை தெரிவிப்பதற்காகவும் அவர்களின் கருத்துகளை கேட்கவும் ரஜினிகாந்த், ஒரு  கடிதத்தை தயார் செய்திருக்கிறார். அதில்  அவர்  கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் பல  மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்டோபர் 2ம் தேதி மதுரையில்  மாநாடு நடத்தி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்த நினைத்தேன்.   ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதமாக யாரையும் சந்திக்க  முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும்  முடியவில்லை. 2011ம் ஆண்டு எனக்கு  சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. 2016ம் ஆண்டில்  சிறுநீரக பாதிப்பு மேலும்  அதிகமாகி, அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.  இது ஒரு சிலருக்கே தெரியும். கொரோனா பரவல் எப்போது முடியும் என  தெரியவில்லை. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம்  அரசியல் பிரவேசம்  பற்றி ஆலோசனை செய்தேன். கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். அது  எப்போது வரும் என தெரியாது. வந்தாலும் அது உங்கள் உடல்நிலையை ஏற்குமா என்பதை  சொல்ல முடியாது.

இப்போது உங்களுக்கு எழுபது  வயதாகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களை  விட உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. ஆகையால் கொரோனா காலத்தில்  மக்களை சந்திப்பதை நீங்கள் தவிர்க்க  வேண்டும் என்றார்கள்.  எனக்கு உயிர்  பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் பற்றிதான் கவலை. புதிய  கட்சி தொடங்கி, மக்களை சந்திக்காமல் மாநாடுகள் நடத்தாமல் வெறும் சமூக  வலைத்தளங்கள் மூலம் பிரசாரம்  செய்தால் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தி,  மக்களிடம் அரசியல் மாற்றம் கொண்டு வர முடியாது.  மருத்துவர்கள் ஆலோசனையை  மீறி கட்சி ஆரம்பித்து, என் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அது பல சிக்கல்களை  உருவாக்கும். ரசிகர்கள்  ஏமாற்றம் அடையக்கூடாது என நினைத்து ஒருவேளை நான்  அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதை ஜனவரி 15க்குள் ஆரம்பிக்க வேண்டும். எனவே  எனது அன்பிற்குரிய ரசிகர்கள் என்னை எந்த முடிவு எடுக்க சொன்னாலும் அதை நான்   ஏற்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ரஜினி கூறியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு கடிதம் ரஜினி எழுதினாரா என்பது தெரியவில்லை என ரஜினி மக்கள் மன்றம் தரப்பில் கூறுகின்றனர். அதே சமயம், கொரோனா  தாக்கம் காரணமாக, தனது அரசியல் முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையில் ரஜினி   இருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என பாஜ தரப்பிலிருந்து  அழுத்தம் தரப்படுகிறது. ஆனால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு  ரசிகர்களும் அவரது முடிவை ஏற்பார்கள் என கூறப்படுகிறது. அதே சமயம் இந்த   அறிக்கை மூலம் ரசிகர்களின் மனநிலையை அறிந்துகொள்ள ரஜினி முடிவு  எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் விளக்கம்

டிவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

என்  அறிக்கை போல ஒரு கடிதம், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக  பரவிக் கொண்டு இருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும்  தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் எனது  உடல்நிலை மற்றும் எனக்கு  மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதை  பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து  எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி  மக்களுக்கு தெரிவிப்ேபன். இவ்வாறு  ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Related Stories: