வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்  வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை தான் நம்பி உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் வடகிழக்கு  பருவமழை தொடங்கியது. 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளின் நீர் மட்டம் ஒரே நாளில் பல அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக, 3,231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியில் நேற்றுமுன்தினம்  1,523 மில்லியன் கன அடி இருந்த நிலையில் நேற்று 1,529 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொண்ட சோழவரம் ஏரியில் 118 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில் நேற்று 128 மில்லியன் கன அடியாகவும், 3300  மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் 2,020 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில் நேற்று 2,094 மில்லியன் கன அடியாவும், 3,645 மில்லியன் கனஅடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,147 மில்லியன் கன அடியாக இருந்த  நிலையில் நேற்று 2,182 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் 4 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டும் என்று  பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘ பூண்டி நீர்பிடிப்பு  பகுதியில் 49 மி.மீ, சோழவரம் ஏரியில் 55 மி.மீ, புழல் ஏரியில் 128 மி.மீ, செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் 14 மி.மீ மழை நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளது. இந்த மழை காரணமாக 4 ஏரிகளில் 125 மில்லியன் கன அடி நீர்  கிடைத்துள்ளது. இதன்காரணமாக ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த மழை தொடரும் பட்சத்தில் அடுத்த சில நாட்களில் 4 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும்’ என்றார்.

Related Stories: