இடி, மின்னலுடன் தொடங்கிய பருவமழை 8 மணி நேரம் கொட்டியதால் சென்னை ஸ்தம்பித்தது: வெள்ளப் பெருக்கால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: இடி மின்னலுடன் நேற்று அதிகாலையில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை 8 மணி நேரமாக தொடர்ந்து வெளுத்து வாங்கியதால் சென்னையே ஸ்தம்பித்துவிட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்த சம்பவத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தது.  தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. அதேபோன்று தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் சென்னை, புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்தது.  நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் பலத்த இடியுடன் கூடிய மின்னல் சென்னை மக்களை மிரட்டியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த இடி சத்தத்தால் வீடுகள் குலுங்குவது போன்ற உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால் பலர் தூக்கத்தில் இருந்து எழுந்து பீதியில் உறைந்தனர். அடுத்து சிறிது நேரத்தில் தொடங்கிய பலத்த மழை காலை 6 மணி வரை இடைவிடாமல் வெளுத்து வாங்கியது.

அதையடுத்து, தூறலுடன் கூடிய மழை தொடர்ந்தது. 2 மணி நேரம் தொடர்ந்து பெய்த கன மழையால் சென்னை மாநகர் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சாலைகளில் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் விழுந்து சாலைகள் அடைக்கப்பட்டிருந்தது. மழையை தாங்க முடியாத சுவர்கள் இடிந்து விழுந்ததால் விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் நொறுங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முட்டியளவுக்கு தண்ணீர் தேங்கியது.   இதனால் மக்கள் வெளியில் வரமுடியாமல் வீடுகளில் முடங்கினர். வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பல தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு அங்கு தேங்கிய நீரில் மிதந்தது. அதை மீட்கும் முயற்சியில் வாகன உரிமையாளர்கள் பலர் பரிதவித்துக் கொண்டிருந்தனர்.  எதிர்பாராமல் பெய்த மழையால் சென்னை மாநகராட்சியும் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பெரிய அளவில் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் மழைநீர் வடியாமல் பல பகுதிகளை வெள்ளம் போல் தண்ணீர் சூழ்ந்திருந்தது. நேற்று காலை அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் பலர் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

குறிப்பாக, மயிலாப்பூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், திருப்போரூர்,  கூடுவாஞ்சேரி, புழல், செங்குன்றம், சோழவரம், ராயபுரம், தண்டையார்பேட்டை,  காசிமேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருத்தணி, பூந்தமல்லி, எண்ணூர்,  மணலி, மாதவரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை,  சென்ட்ரல்,  எழும்பூர் பகுதிகளில் சாலைகளில் இருபுறமும் மழைநீர் கரைபுரண்டோடியது. வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு பகுதிகளில் தெருக்களில் தேங்கிய  தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். அனைத்து இடங்களிலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய  சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தததால் வாகனங்களில் சென்றவர்கள்  ஊர்ந்தே சென்றனர். பல இடங்களில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள்  கடும் அவதி அடைந்தனர்.  நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதேபோல் வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்கள் இயங்கின. அண்ணாசாலையில் மாநகரப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கியது.

ஆழ்வார்பேட்டை செல்லும் சாலையில் வேரோடு சாய்ந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பூர் பின்னிமில் அருகில் ஸ்டீபன் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல காணப்பட்டது. அங்கு போலீசார் தடுப்பு ஏற்படுத்தி யாரையும் செல்லவிடாமல் தடுத்தனர். தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் விம்மோ நகர் உள்ளிட்ட வடசென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது.

 இதனால் அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஆலந்தூர் கத்திப்பாரா ஜிஎஸ்டி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலையில் அலுவலகம் செல்பவர்கள் தங்கள் வாகனங்களை தண்ணீரில் மிதந்தபடியே ஓட்டி சென்றனர்.

 பல்வேறு காரணங்களுக்காக சாலைகளின் ஓரத்தில் தோண்டப்பட்டிருந்த குழிகளில் விழுந்து பலர் காயம் அடைந்தனர். மொத்தத்தில் சென்னை மாநகரமே சாலைகளில் தேங்கிய மழைநீரால் குளம் போல் மாறிவிட்டது. மழைநீர் வெளியேற வழியில்லாததால் தான் 8 மணி நேர தொடர் மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல் சென்னையே தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடந்த 2017 நவம்பருக்கு பின்னர் சென்னை மாநகரில் ஒரே நாளில் 200 மி.மீ அளவிற்கு மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. வடக்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் ஒன்றோடு ஒன்று இணைந்த  நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக  ஒரே இரவில் 150 முதல் 200 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் அரசுக்கு உரிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தது. ஆனால்,  உள்ளாட்சி துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால்  சென்னை தண்ணீரில் மிதப்பதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர்.  இதேபோல், சென்னையில் பல இடங்களில் சாலை பணி,  கால்வாய் பணி, மழைநீர் வடிகால் பணி, கழிவு நீர் வடிகால் பணி, சுரங்கப்பாதை  பணி ஆகியவற்றை உரிய நேரத்தில் முடிக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக  செயல்பட்டதே சாலைகளில் வெள்ளம் தேங்க காரணம் எனவும் புகார்  தெரிவித்துள்ளனர்.

 மேலும், நந்தனத்தில் இரவு முதல் பெய்த கனமழை காரணமாக சாலையோர சுவர் இடிந்து அருகில் இருந்த கார்கள் மீது விழுந்தது. இதனால், 6  கார்கள் பலத்த சேதம் அடைந்தது.  2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே  நாளில் அதிகளவு மழை பெய்தது, இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது. மழை நீர் வடிகால் அமைப்பதற்குப் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஓரிரவு மழைக்கு கூட சென்னை மாநகரம் தாக்கு பிடிக்க முடியாமல் வெள்ள நீர் வெளியேற முடியாமல் தனித் தீவு போன்று காட்சியளிப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு 2 நாள் மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழையின் அடுத்த கட்டமாக வங்கக் கடலில் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் அந்த வளிமண்டல காற்று சுழற்சி நிலை கொண்டு இருப்பதால், இன்றும் வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

Related Stories: