இஓஎஸ்-01 நவீனரக புவிகண்காணிப்பு செயற்கை கோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி 49 ராக்கெட் நவ.7ல் விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: நவீன ரக இ.ஓ.எஸ்-01 புவிகண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் நவம்பர் 7ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் தடைபட்டது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி ராக்கெட் ஏவுதல் பணிகள் அனைத்தும் சுணக்கம் அடைந்தது. இந்தநிலையில், நவம்பர் மாதம் 7ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி -சி49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. அன்றைய தினம் மாலை 3 மணி 02 நிமிடத்தில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனுடன் இணைந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இ.ஓ.எஸ்- 01 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளையும் துல்லியமாக மேற்கொள்ளும். கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் டிசம்பரில், பி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி எனப்படும் சிறிய ரக ராக்கெட்டை விண்ணில் ஏவவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Related Stories: