தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னைவானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை ஒரு வாரம் தள்ளிப் போனது. கேரளாவில் இது வரை நீடித்து வந்த தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பசிபிக் கடல் பகுதியில் தற்போது லா-நினோ என்னும் குளிர் மற்றும் குளிர்க்காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இமய மலைப் பகுதியில் இருந்து தெற்கு நோக்கி குளிர்ந்த காற்று வீசுவதாலும் தமிழகத்தில் தற்போது தரைக்காற்று குளிர்ச்சியாக வீசத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக தற்போது வட கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக காலை நேரங்களில் சில இடங்களில் பனிப் பொழிவும் நிலவுகிறது. தற்போது தமிழகம், புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.சில இடங்களில் லேசான மழை பெய்யும். தமிழகம் புதுச்சேரியில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: