போலீசாரிடம் இருந்து 18 லட்சம் ரூபாயை பறித்து சென்ற பாஜக தொண்டர்கள்: வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டதை கைப்பற்றியதால் அதிர்ச்சி

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாஜக வேட்பாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 18 லட்சம் ரூபாயை போலீசாரிடம் இருந்து அந்த கட்சியினர் பறித்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் தப்பக் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பாஜக வேட்பாளராக திரு ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். அந்த தொகுதி முழுவதும் வீடு வீடாக பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து பாஜக வேட்பாளரின் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சித்திக் பேட்டையில் உள்ள பாஜக வேட்பாளர் திரு ரகுநந்தன் வீட்டில் இருந்து 18 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். தகவல் அறிந்து அங்கு திரண்ட பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டிற்குள் நிலைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி வீட்டிற்குள் நுழைந்த பாஜகவினர் சோதனையில் கைப்பற்றிய பணம் மற்றும் ஆபரணங்களை பறிக்க முயன்றனர். போலீசாரை நான்கு பக்கத்தில் இருந்தும் தாக்கிய அவர்கள் கட்டுக்கட்டாக பணத்தையும் ஆபரணத்தையும் பறித்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.

பாஜக வேட்பாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 18 லட்சம் ரூபாயில் 12 லட்சம் ரூபாயை அந்த கட்சியினர் பறித்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை துரத்து சென்றனர். இது தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்யும் போலீசார் பணத்தை பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக வேட்பாளர், அவரது உறவினர்கள் மற்றும் அந்த கட்சியினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: