மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: “மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்வர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: “அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது” என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

“பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது” என்று எழுத்துபூர்வமாக மத்திய பாஜக அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், “இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள்” என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் கைகோர்த்து கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.

இதை பிற்படுத்தப்பட்ட-பட்டியலின சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்வு ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் உள்ளங்களிலும் கொதித்துக் கொண்டிருப்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றே கருதுகிறேன். மகாபாதகமான இந்தச் சமூக அநீதிக்கு மனமுவந்து துணை போகும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து விட்டு-அதற்காக அமைக்கப்பட்ட நால்வர் கமிட்டிக் கூட்டத்தில் அது பற்றியே வாய் திறக்காமல் அமைதி காத்து இரட்டை வேடம் போட்டது.

ஆகவே “நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு” என்ற பாணியில் மத்திய பாஜக அரசும்-அதிமுக அரசும் இணைந்து கூட்டணி வைத்து  இடஒதுக்கீடு  உரிமை மீது இடி விழுவது போன்ற தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே திமுக ஏற்கனவே வலியுறுத்தியது போல் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும்-பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்திற்காகக் காத்திராமல்-ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி-பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல்-சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல்-மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதல்வர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்வு ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் உள்ளங்களிலும் கொதித்துக் கொண்டிருப்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

Related Stories: