சென்ட்ரல் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: 24 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு; வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சென்னை: சென்ட்ரல் அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் சசிகுமார் (43). இவர் கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு துறைமுகத்திலிருந்து ஸ்டீல் தகடுகள் கொண்ட 13 காயில்கள் சுமார் 750 கிலோ  ஏற்றிக்கொண்டு சென்ட்ரல் வழியாக பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செல்லும்போது அங்கு ஏற்கனவே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிக்காக சாலையில் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் செல்லும் போது 40 அடி கொண்ட கன்டெய்னர் லாரி திடீரென சாய்ந்தது. இதனால் அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.

லாரியில் இருந்த காயல்கள் சரிந்து லாரியும் மண்ணில் புதைந்தது.பூந்தமல்லி நெடுஞ்சாலை பல்லவன் சாலை பூக்கடை பாரிமுனை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வடக்கு கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் பாண்டியன் மற்றும் யானைகவுனி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கன்டெய்னர் லாரியை மீட்பு பணிக்காக  நேற்று முன் தினத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் உதவியுடன் 3 ராட்சச கிரேன்கள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நேற்று இரவு வரை அந்தப் பணி நடந்து கொண்டிருந்தது.இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்த வழியாக செல்லும் பேருந்து கார் வேன் இருசக்கர வாகனங்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை, ரிப்பன் மாளிகை, ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம், மருத்துவ கல்லூரி செல்கின்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் இதுகுறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அதிக பாரம் ஏற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது மெட்ரோ ரயில் பணி நடைபெற்ற இடம் என்பதால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். துறைமுகத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கன்டெய்னர் லாரி மூலம் பொருட்கள் ஏற்றி செல்லப்படுகிறது. இப்படி ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் அதிக அளவிற்கு கொண்டு சென்றால் போக்குவரத்து அதிகாரிகள் அதனை சோதனை செய்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். அப்படி உள்ள நிலையில் இதுபோல் அதிக பாரத்தை ஏற்றிய கன்டெய்னர் லாரி  எப்படி வந்தது என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories: