ஆட்சேபகரமான இடங்களில் வசிப்போருக்கு மாற்று இடம்: புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா: தலைமை செயலாளர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

டிசம்பரில் பட்டா வழங்கும் மேளா முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதற்காக, டிசம்பர் மாதம் பட்டா  வழங்கும் மேளாவை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார்.  தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம்  ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் வசிப்போர்கள் அங்கிருந்து வெளியேற்றும் நடைமுறை இருந்து  வந்தது. ஆனால், தற்போது ஆட்சேபனை இல்லாத புறம்போக்கும் நிலங்கள், ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் என வரன்முறைப்படுத்த  முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை கள அலுவலர்கள் மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம பஞ்சாயத்துக்குளில்  ஆட்பேசனை இல்லாத புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும்  ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பான  பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் விவரங்கள் தமிழ் நிலம் என்கிற மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில்,ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் மாவட்ட அளவில் வரன்முறைப்படுத்துவது 1,39,200 இனங்களும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம்  தீர்மானம் நிறைவேற்றி வரன்முறைப்படுத்துவது 33,713 இனங்களும், சிறப்பு ஆணைகள் மூலம் வரன்முறைப்படுத்துவது 44,772 இனங்களும்,  ஆட்சேபனை உள்ள நீர்வரத்து கால்வாய், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு 1,48,469 இனங்கள், ஆட்பேசனை உள்ள நீர்நிலையில் ஆக்கிரமிப்புகள் 25,396  என மொத்தம் 4,09,676 இனங்கள் உள்ளது. அதன்படி, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் வரன்முறை செய்யப்படுகிறது. இந்த  நிலங்களுக்கு  பட்டா வழங்கும் நடைமுறைகளை நவம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். டிசம்பரில் பட்டா வழங்கும் மேளாவை முதல்வர்  எடப்பாடி தொடங்கி வைக்கிறார்.

மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கும் மேளாவை நடத்தி முடிக்க வேண்டும். இந்த புறம்போக்கு நிலங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆட்சேபகரமான நிலங்களாக இருந்தால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம்  ஒதுக்கப்படுகிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது, இந்த  பட்டா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: