நிலுவை தொடர்பாக அலுவலகத்துக்கு அமைச்சர், ஐஜி ஆய்வு செய்யும்போது சார்பதிவாளர்கள் பணிக்கு வராதது ஏன்? தொடர்பு எல்லைக்கு வெளியில் சியுஜி நம்பர்

* டிஐஜிகளிடம் விளக்கம் கேட்டு கூடுதல் ஐஜி அதிரடி

* சார்பதிவாளர்கள் அலுவலக நேரங்களில் பணிகளில் இருப்பதில்லை. மேலும், பெரும்பாலான சார்பதிவாளர்கள் தங்களது சியுஜி நம்பரை சுவிட்ச் ஆப்  செய்து வைத்துள்ளனர்.

சென்னை: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர், ஐஜி ஆய்வு செய்யவிருக்கும் நிலையில், சார்பதிவாளர்கள்  பணிக்கு வராமல் இருப்பது ஏன். சியுஜி நம்பரை சுவிட்ச் ஆப் செய்து இருப்பது தொடர்பாக கூடுதல் ஐஜி அலுவலகம் மண்டல டிஐஜிக்களிடம்  விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து  பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. எனினும் அதற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் உடனே தருவதில்லை.  இது குறித்து  ஏராளமான புகார்கள் ஐஜி அலுவலகத்துக்கு வந்தது.

இது தொடர்பாக வரும் புகாரின் பேரிலும், தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி கூடுதல் லஞ்சம் கேட்டு நெருக்கடி தருவதாகவும் புகார் வந்தது.  இது தொடர்பாக வரும் புகாரின் பேரில், கடந்த சில நாட்களாக சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி  வருகின்றனர். இந்த ேசாதனைக்கு பயந்து சார்பதிவாளர்கள் சிலர் 1 மாதம் விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிலர், பிற்பகலுக்கு மேல்  சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் இருப்பதில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில் கூடுதல் ஐஜி கே.வி.சீனிவாசன் அலுவலகம் சார்பில்  அனைத்து மண்டல டிஐஜி, சார்பதிவாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில்,பதிவுத்துறை அமைச்சர் வீரமணி, ஐஜி ஜோதி நிர்மலாசாமி மண்டல வாரியாக சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்கின்றனர். அப்போது,  நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஆவணங்கள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பவுள்ளனர். அதற்கு சார்பதிவாளர்கள் உரிய விளக்கம் அளிக்க  வேண்டும். ஆனால், சார்பதிவாளர்கள் அலுவலக நேரங்களில் பணிகளில் இருப்பதில்லை. மேலும், பெரும்பாலான சார்பதிவாளர்கள் தங்களது சியுஜி  நம்பரை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளனர். சார்பதிவாளர்கள் ஏன் சுவிட்ச் ஆப் செய்துள்ளனர். மேலும், பணிக்கு வராமல் இருப்பது ஏன் என்பது  குறித்தும், பத்திரம் பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாகவும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: