சட்டக்கல்வி நுழைவு தேர்வில் மதிப்பெண் குளறுபடி தமிழக மாணவி ஐகோர்ட்டில் வழக்கு: சட்ட பல்கலைகளின் கூட்டமைப்புக்கு நோட்டீஸ்

சென்னை: சட்டக் கல்விக்கான நுழைவு தேர்வில் தமிழக மாணவியின்  மதிப்பெண் குளறுபடியான வழக்கில் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின்  கூட்டமைப்பு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓசூரை சேர்ந்த பாண்டியராஜன் தாக்கல்  செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  எனது மகள் சத்தியஸ்ரீ 2020-2021ம் ஆண்டுக்கான சட்டக் கல்வியை கற்பதற்காக தேசிய சட்ட  பல்கலைக்கழகம் நடத்திய தகுதித் தேர்வான (கிளாட்) தேர்வை எழுதினார். தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில்  எனது மகள் 67.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  தேசிய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் எனது மகளுக்கு 5744வது இடம் கிடைத்தது. அதன்  பின்னர் விடைத்தாள் நகலையும் பதிவிறக்கம் செய்தோம்.

அதில் எனது மகளுக்கு 68 மதிப்பெண்கள் கிடைத்தன. எனது மகளுக்கு கவுன்சிலிங்குக்கான அழைப்பு வரவில்லை. ஆனால், எனது மகளைவிட  குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு கவுன்சிலிங் அழைப்பு வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்த்தை தொடர்பு  கொண்டபோது கவுன்சிலிங் பட்டியல் முடிந்துவிட்டது என்று பதில் வந்தது. இதையடுத்து, மீண்டும் ஸ்கோர் கார்டை இணையதளத்தில் பதிவிறக்கம்  செய்தபோது எனது மகள் 22.75 மதிப்பெண் பெற்றிருப்பதாக அதில் பதிவாகியிருந்தது.  இதையடுத்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம்  செய்துபார்த்தபோது அதுவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை  ஸ்கோர்ட் கார்டை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது 23.75 என்று  மீண்டும் மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

தேர்வு முடிவுகள் வெளிவந்த நாளில் எனது மகள் 67.5 மதிப்பெண் பெற்றிருந்து நிலையில் அக்டோபர் 13ம் தேதி மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளது  அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கும் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின்  கூட்டமைப்புக்கும் கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை. எனது மகளின் மதிப்பெண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு சட்டக் கல்வி  பயிலும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.  

எனவே, தேர்வு முடிவின்போது அவர் பெற்ற 67.5 மதிப்பெண்களையே மீண்டும் வழங்குமாறும் தென்னிந்தியாவில் உள்ள  தேசிய சட்டப்  பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஒரு சீட்டை ஒதுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்  கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேசுபாலன் ராஜா ஆஜரானார். மனுவை  விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நவம்பர் 5ம் தேதிக்குள் பதில் தருமாறு தேசிய சட்டப்பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டார்.

Related Stories: