செய்யாறில் மழையின்போது இடி தாக்கி சேதமடைந்த ராஜகோபுர யாழி சிற்பம் சீரமைப்பு

செய்யாறு: செய்யாறில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் இடி தாக்கியதில் இடிந்து சேதமான யாழி சிற்பம் சீரமைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்தூர் பகுதியில் உள்ளது பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில். இக்கோயில்  திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. இங்குள்ள ஆண் பனை, பெண் பனையாக மாறி, குலை ஈன்ற வரலாற்று சிறப்பு மிக்கது. இந்நிலையில்,   செய்யாறில் கடந்த 22ம் தேதி இரவு 11 மணியளவில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தாக்கியதில் ராஜகோபுரத்தின்  மேற்புறம் ஒரு பகுதி இடிந்தது.

இதில் அங்கு அமைக்கப்பட்ட யாழி சிற்பத்தின் தலைப்பகுதி இடிந்து விழுந்தது.  நேற்று முன்தினம் காலை கோயிலுக்கு வந்த சிவாச்சாரியார்கள்  மற்றும் பக்தர்கள் கீழே கிடந்த யாழி சிற்பத்தின் மண் துகள்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்த கோயில் நிர்வாகத்தினர் ஸ்தபதியுடன்  வந்து சிற்பத்தை சீரமைத்தனர். யாழி சிற்பம் சேதமானதால் ஹோமம் நடத்தி பரிகார பூஜை செய்தனர். இதையடுத்து புனரமைப்பு பணிகள் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.

Related Stories: