பண்டிகை காலத்தில் கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க என்ன வழி?

சென்னை: பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தவும்  அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச்  மாதம் தன் வேலையை காட்ட ஆரம்பித்தாலும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உச்சத்தை தொட்டது. அதாவது தினசரி 6 ஆயிரம் முதல் 7  ஆயிரம் பேருக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தினசரி 100க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை அக்டோபர்  மாதம் முதல் குறையத் தொடங்கியது. தற்போது தினசரி 3 ஆயிரம் பேருக்கு மற்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. தினசரி 40  பேர் மட்டுமே மரணம் அடைகின்றனர்.

23ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 7 லட்சத்து 3 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 59  ஆயிரத்து 432 பேர்  லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 10, 858 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், மாஸ்க்  அணிவது, கை கழுவுவது தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை  மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையை விட்டு கொரோனா வெளிநாட்டுக்கு  விமானத்தில் ஏறிச் சென்றதுபோல விதிகளை வீதிகளில் கீழே போட்டு காலில் மிதித்துவிட்டு மாஸ்க், சமூக இடைவெளியின்றி நடமாடுகின்றனர்.

கொரோனாவுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டது சென்னை மக்கள் தான். ஆனால் அவர்களிடம் அந்த விழிப்புணர்வே இல்லாத நிலையே பண்டிகை  காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டுள்ளது. இது நோய் தொற்று பரவலுக்கு வழி வகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சென்னையை பொறுத்தவரை வணிக நிறுவனங்களை கண்காணிக்க மண்டலம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தினசரி காலை  மற்றும் மாலை ஆய்வு நடத்த வேண்டும் என்று அனைத்து வார்டு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது கொரோனா  தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள், கடைகள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினரும் அதை கடுமையாக கண்காணித்து வருகின்றனர். அதே சமயத்தில் பொதுவெளியில் பொதுமக்கள் அதிகம்  கூடும் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறுவோர்  மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு உடனடியாக சீல் வைக்கவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் பர்சேஸ் செய்ய தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வணிக நிறுவனங்களுக்கு செல்கின்றனர். மாஸ்க் இல்லாவிட்டாலும் விற்பனை  நோக்கத்திற்காக மக்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனாவில் விட்டதை இப்போது பிடிக்க வியாபாரிகள் ஒரே இடத்தில்  நூற்றுக்கணக்கானவர்களை சிறிய இடத்தில் கூடவிடுகின்றனர். இதனால் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரை ஒருவர் இடித்து  கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையின் மிகப் பெரிய வணிக பகுதியான தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பெரிய வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம்  அலைமோதுகிறது. இதைத்தவிர்த்து சிறிய கடைகளிலும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் பலர் முகக்கவசம்  அணியாமலும் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே அரசு கூட்டத்தை கட்டுப்படுத்த தீவிர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  கடைகளை தொடர்ந்து கண்காணிப்பது, விதிகளை மீறுபவர்கள் நடவடிக்கை எடுப்பது உள்ளட்டவற்றை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்  என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே தொற்று பரவலை குறைக்க  முடியும் என்று விழிப்புடன் இருந்து அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் என்ன செய்யவேண்டும்?

* கூட்டமாக கடைகளுக்கு செல்லக் கூடாது.

* வீட்டில் ஒருவர் அல்லது இருவர் சென்று பொருட்களை வாங்கலாம்

* முகக்கவசம் அணிந்துதான் கடைகளுக்கு செல்ல வேண்டும்

* தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

* முடிந்த வரையில் வீட்டில் இருந்து பண்டிகைகளை கொண்டாட வேண்டும்.

* கடைசி நேரத்தில் பொருட்களை வாங்காமல் முன் கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்

* குழந்தைகளை மற்றும் வயதானவர்களை கடைகளுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

வணிகர்கள் என்ன செய்ய வேண்டும்?

* அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்

* ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.

* டோர் டெலிவரி முறையை நடைமுறைபடுத்தலாம்.

* கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

Related Stories: