திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 8 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்: தமிழகம் முழுவதும் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் பி.கணேசன், நகர மற்றும் ஊரமைப்பு இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார். கலால் வரி துணை ஆணையர்  எம்.எஸ்.சங்கீதா, உயர் கல்வித்துறை துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அருணா, வேளாண்மை துறை  கூடுதல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பி.பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

நிதித்துறை இணை செயலாளர் எம்.அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வி.சாந்தா,  திருவாரூர் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். பட்டு வளர்ப்பு இயக்குனர் பி.ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  கரூர் மாவட்ட கலெக்டர் டி.அன்பழகன், மதுரை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.  மதுரை மாவட்ட கலெக்டர்  டி.ஜி.வினய், சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி, கரூர் மாவட்ட கலெக்டராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு ஊரக மாற்றுத்திட்ட தலைமை செயல் அதிகாரி எஸ்.பி.கார்த்திகா, தர்மபுரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதார  முறைகள் திட்ட இயக்குனர் அஜய் யாதவ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் குடும்ப  நலத்துறை இணைச்செயலாளர் ஏ.சிவஞானம், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருவாரூர்  மாவட்ட கலெக்டர் டி.ஆனந்த், வேளாண்மை துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு  மேம்பாட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அபூர்வ வர்மா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்  தலைமை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை மேலாண் இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக  மாற்றப்பட்டுள்ளார். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர், தமிழ் மேம்பாடு மற்றும் செய்தித்துறை அலுவல் சாரா கூடுதல் செயலாளர் மற்றும்  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) பி.சங்கர், பதிவுத்துறை தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆகிய பதவிகளில் பி.சங்கர்  கூடுதல் பொறுப்பு வகிப்பார். மாநில விருந்தினர் மாளிகை இணை புரோட்டோகால் அதிகாரி டி.கிருஸ்துராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய  துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 வன்னிய குல சத்திரிய பொது அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் ஆர்.பிருந்தாதேவி, தமிழ்நாடு மேக்னசைட் மேலாண்மை இயக்குனராக  மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, தமிழ்நாடு மின்சார உற்பத்தி-பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின்  வினியோக கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக (நிதி) மாற்றப்பட்டார்.    கோவை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் ஸ்ரவன்குமார்  ஜதாவத், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். ஏற்கனவே,  வேளாண்மைத்துறை துணை செயலாளராக ஸ்ரவன்குமார் ஜதாவத்தை நியமித்த ஆணை ரத்து செய்யப்படுகிறது.  

பதிவுத்துறை தலைவர் பி.ஜோதிநிர்மலாசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். நகராட்சி  நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு நகர நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக கூடுதல்  பொறுப்பு வகிப்பார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: