நாளை ஆயுத பூஜை கொண்டாட்டம் : பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்; பூ, பழங்கள் விலை கடும் உயர்வு

சென்னை: நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருட்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்றே தொடங்கியது. கடைசி நாளான இன்று விற்பனை மேலும் களை கட்டியது. கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேட்டில் பொருட்களை வாங்க ெபாதுமக்கள் காலையில் இருந்தே வரத் தொடங்கினர்.

இதனால், விற்பனை களை கட்டியது. மாலையில் மேலும் விற்பனை விறுவிறுப்படைந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனை கிடு, கிடுவென விலை உயர்ந்தது.அதாவது மாதவரத்தில் உள்ள பழமார்க்கெட்டில் ஆப்பிள்(1 கிலோ) ரூ.100 முதல் ரூ.150 வரை தரத்துக்கு ஏற்றார் போல் விற்கப்பட்டது. மாதுளை ரூ.110 முதல் ரூ.160, சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.70 வரை, ஆரஞ்ச் ரூ.40 முதல் ரூ60 வரை,  அன்னாச்சி 1  ரூ.40 முதல் ரூ.60 வரை, கொய்யா ரூ.50 முதல் ரூ.60 வரை, சப்போட்டா ரூ.50 முதல் ரூ.60 வரை, திராட்சை ரூ.80, வாழைத்தார் ரூ.250 முதல் 500 வரை விற்கப்பட்டது. இதே போல அனைத்து பழங்களும் கிலோவுக்கு கிலோ ரூ.15  முதல் ரூ.20 வரை அதிகமாக விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் பழங்கள் விலை ரூ.30 முதல் ரூ.40 வரை அதிகமாக விற்கப்பட்டது.

அதைப்போன்று வானகரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்குவதற்கும் மக்கள்கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கொரோனா தாக்கத்தால் பூ விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை (1 கிலோ) ரூ.900, பிச்சிப்பூ ரூ.600, கேந்தி ரூ.30, சாமந்தி ரூ.50லிருந்து  ரூ.100, அரளி பூ ரூ.300, பட்டன் ரோஜா ரூ.160 முதல் ரூ.200, நாட்டு ரோஜா(100 பூ ) ரூ.60க்கும் விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் பூ  விலை மொத்த விலையை விட ரூ.20 வரை அதிகமாக விற்பனையானது.

இதேபோல, பொரி ஒரு படி ரூ.20, உடைத்த கடலை கிலோ ரூ.100, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.100, வாழைக்கன்று இரண்டு ரூ.30, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.20 முதல் ரூ.50 வரை, தென்னை மட்டை தோரணம்  இரண்டு ரூ.30 ஆகவும் விற்கப்பட்டது. காய்கறி விலைகளில் மாற்றம் இல்லாமல் பழைய விலைக்கே விற்கப்பட்டது. இதே போல் அனைத்து பூஜை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. விலை அதிகரித்த போதிலும், விலையை  பற்றி கவலைப்படாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கினர். இதனால் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Related Stories: