அரசுக்கு தானமாக கொடுத்த பூங்கா ஆக்கிரமிப்பு; அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் மாம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு நந்தா நகர் என்ற பெயரில் 17 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1989ம் ஆண்டு 204 மனைகள் கொண்ட வீட்டுமனைப்பிரிவு உருவானது. இங்கு1.62 ஏக்கர் பரப்பளவில் அமைத்த 2 பூங்கா, சாலைகள் திருப்போரூர் ஒன்றியத்துக்கு தானமாக வழங்கி, பத்திரப்பதிவு செய்து. டிடிசிபி அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. தற்போது, இந்த மனைப்பிரிவில் 50க்கும் மேற்பட்டோர், வீடு கட்டி வசிக்கின்றனர். மனைப்பிரிவு உருவாக்கியபோது 2 பூங்காக்கள் அமைக்க தானமாக கொடுத்த சுமார் 71 சென்ட் பூங்கா இடத்தில், தற்போது தனிநபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார். இதுகுறித்து நந்தா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், காஞ்சி கலெக்டரிடம், பூங்கா இடத்தை மீட்டு வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம், அரசுக்கு சொந்தமான பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது சம்பந்தமாக விளக்கம் கேட்டது.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்து திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என சம்பந்தப்பட்ட தனியாருக்கு, நேற்று அறிவிப்பு அளித்து, தாம்பரம் ஆர்டிஓ ரவி, வண்டலூர் வட்டாட்சியர் செந்தில், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ராகவன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், கிறிஸ்தவ தேவாலயம் இருப்பதால் அதை இடிக்கக்கூடாது என கூறி ஒரு தரப்பினர், கட்டிடத்தை விட்டு வெளியே வராமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து, தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் போலீசார், அதிகாரிகள், நேற்று மாலை 3.30 மணிவரை இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும், மற்றொரு தரப்பில் அகற்றக்கூடாது என்றும் உறுதியாக இருந்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை ஒருவாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் இருதரப்பும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு முடிவுக்கு வர வேண்டும். தவறினால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்து சென்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: